Monday, February 16, 2015
2016 பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
2016 சட்டசபைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணி அமைப்போம் என்று பாமக அறி்வித்துள்ளது. மேலும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராகவும் அது அறிவித்துள்ளது. இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அது இடம் பெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் பாமகவின் அறிவிப்பால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பெரும் விரிசல் உண்டாகும் என்றும் தெரிகிறது. சேலத்தில் நேற்று பாமக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாலையில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெற்ற பா.ம.க. தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதை காலம் இட்ட கட்டளையாக பா.ம.க. கருதுகிறது. இதற்காக மக்கள் நலனிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்க பா.ம.க. தீர்மானித்து இருக்கிறது. தமிழகத்தை இரு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து மீட்டு, வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதில் அக்கறை கொண்ட கட்சிகள் அனைத்தும் பா.ம.க. தலைமையிலான இந்த மாற்று அணியில் இணைந்து பணியாற்ற வரும்படி இந்த பொதுக்குழு கூட்டம் அழைப்பு விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2016-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பா.ம.க. கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணியை முன்நிறுத்துவது என்பதை இந்த மாநாட்டின் மூலம் அறிவிக்கிறோம். இந்த மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுகிறேன் என்றார். இதையடுத்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார். அதில், தமிழ்நாட்டை திட்டமிட்டு சீரழிக்கும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட பா.ம.க. கட்சி தலைமையில் மாற்று அணி அமைத்து, அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.
No comments :
Post a Comment