(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 17, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்க தடை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவிழாக்கள், திருமணங்கள், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகள் ஆகியன வைப்பதை ஒழுங்குபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள்,தட்டி போர்டுகள் வைத்திட விரும்புவோர் அரசு அனுமதி பெற வேண்டும். என்ன நோக்கத்திற்காக

விளம்பரப் பலகை வைக்கப்படுகிறது, அளவு, எந்த இடம், வைக்கப்படும் இடம் யாருக்கு சொந்தமானது, விளம்பரப் பலகையில் இருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல்துறை ஆய்வாளர் அல்லது துணைக் கண்காணிப்பாளருக்கு 10 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பம் அளித்திட வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்குவர். அனுமதி கிடைத்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியினருக்கு காவல்துறையின் பரிந்துரைக் கடிதத்துடன் மனு அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்படும் மனுக்கள் அப்பகுதிகளுக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விளம்பரக் கட்டணத்தை செலுத்தி ரசீது மற்றும் காவல்துறையினரின் பரிந்துரை ஆகியவற்றுடன் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(கட்டப்படும் கட்டணங்கள் திருப்பித் தரப்படமாட்டாது) ஆட்சியருக்கு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.

தாமதமாக தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் விளம்பரப் பலகைகளில் அடியில்ஒரு அங்குல அளவுக்கு ஆட்சியரின் அனுமதி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.  அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படும்.

அகற்றுவதற்கு ஆகும் செலவினத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யப்படும். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களை அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் உடனடியாக அகற்றிவிட வேண்டும். இம்மாதம் 25 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியரின் அனுமதியில்லாமல் எந்த விளம்பரப் பலகைகளும் வைக்கக் கூடாது.


இதனை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளுக்கு உள்பட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment